Showing posts with label கிரகணம். Show all posts
Showing posts with label கிரகணம். Show all posts

Saturday, 20 June 2020

சூர்ய கிரகணம் 2020- விரதம் கடைப்பிடிக்கும் முறை.

சூர்ய கிரகணம் 2020- விரதம் கடைப்பிடிக்கும் முறை.

முதலில் இந்திய புராணம் இதை பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

அசுரர்களும் தேவர்களும் சேர்ந்து பாற்கடலை கடையும் பொழுது அமிர்தம் வெளிப்படுகிறது. அந்த அமிர்தத்தை பங்கிட்டுக் கொள்வதில் இரண்டு கோஷ்டிக்கும் பிரச்சனை நடக்கிறது. தேவர்கள் சென்று விஷ்ணுவை அழைத்து முறையிடுகிறார்கள். உடனே விஷ்ணு அழகிய மோகினியாக அவதாரம் எடுத்து அசுரர்கள் முன் தோன்றுகிறார். அசுரர்களும் மோகினியின் அழகில் மயங்கி அவள் சொல்வதற்கெல்லாம் தலையசைக்கிறார்கள். அவளையே அமிர்தத்தை பங்கிட்டு கொடுக்க சொல்கிறார்கள். மோகினி இரண்டு கோஷ்டியையும் வரிசையாக அமர்த்தி அமிர்தம் பரிமாறுகிறாள். அசுரர்கள் அவளது அழகின் மயக்கத்திலேயே அவள் கொடுத்த அமிர்தத்தை  சாப்பிட்டுக்கொண்டிருக்க, அவர்களுள் ஒருவனான ராகு என்ற அசுரன் மட்டும் அவளை கவனிக்கிறார். அப்பொழுது தான் தெரிகிறது, மோகினி தேவர்களுக்கு அமிர்தத்தை அள்ளி அள்ளி கொடுக்கிறாள். அதே சமயம் அசுரர்களுக்கு வெறும் கரண்டியை நீட்டி பாவலா செய்கிறாள் என்று. அது தெரியாமல் இந்த அசுர கூட்டம் வழிந்து கொண்டே வெறும் தட்டை நக்கிக்கொண்டு இருக்கிறார்கள். தங்கள் ஏமாற்றப் படுகிறோம் என்று உணர்த ராகு எழுந்து யாருக்கும் தெரியாமல் தேவர் கூட்டத்தில் புகுந்து அமிர்தத்தை வாங்கி பருகிவிடுகிறான். அதை கண்டுகொண்ட  சூரியன் சந்திரன் ஆகிய இரண்டு தேவர்களும் விஷ்ணுவிடம் சென்று போட்டுக்கொடுகின்றனர். கோபம் கொண்ட விஷ்ணு தன் சக்கிராயுதத்தால் ராகுவின் தலையை வெட்டிவிடுகிறார். அமிர்தம் பருகி சாகாவரம் பெற்றதால் தலைவேறு முண்டம் வேறாக உயிர் இருக்கிறது. பிரம்மா தலை வெட்டப்பட்ட பாம்பின் உடலை ராகுவின் தலைக்கும், பாம்பின் தலையை ராகுவின் உடலுக்கும் பொறுத்துகிறார்(புராணங்களில் நடக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அனைத்தும் மிருகத்துக்கும் மனிதர்களுக்கும் தான் நடக்கும். வெட்டப்பட்ட மனித உறுப்பை மனிதனிடம் பொருத்தும் வழக்கம் எல்லாம் இல்லை). அப்படி உருவானவையே ராகுவும், கேதுவும். இந்த இருவரும் தங்களை காட்டி கொடுத்த சூரியனையும் சந்திரனையும் துரத்தி துரத்தி விழுங்குவதே சூர்ய கிரகணம், சந்திர கிரகணம் ஆகும்.

இதே போல பல நாடுகளில் பல கதைகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு

வியட்நாம் - தவளை சூரியனை விழுங்குவது சூர்ய கிரகணம்.

சீனா - பறக்கும் நாகம்(dragon) சூரியனை சாப்பிடும் நிகழ்வு.

கனடா பழங்குடிகள் - சொர்க்கம் சூரியனை விழுங்குகிறது.

மெக்சிகோ - கோபம் கொண்ட சூரியன் கோபித்துகொண்டு வானத்தை விட்டு வெளியேற முயற்சிக்கும் நிகழ்வு.

ஆப்ரிக்கா- சூரியனுக்கும் சந்திரனுக்கும் சண்டை நடக்கிறது.

கொரியா - அரசன் தனது நாய்களை ஏவி சூரியனை திருட பார்க்கிறான்.

நீங்கள் குழந்தைகளுடன் பழகியிருக்கிறீர்களா? அவர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு நமக்கு விடை தெரிந்தாலும் அவற்றை அவர்களுக்கு சொன்னால் அதை புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவு வாளர்ச்சி அவர்களுக்கு இருக்காது என்பதால் குழந்தைகளுக்கு ஏற்றார் போல நாமே எதாவது கதை சொல்லுவோம். இரண்டு குழந்தைகள் அவர்களுக்குள் பேசிக்கொள்ளும் பொழுதும் இப்படி கதைகள் பிறக்கும். சில காலம் வரை அதை அந்த குழந்தைகளும் நம்பிக்கொண்டு இருப்பார்கள். வளர்ந்த பிறகு உண்மை விளங்குவிடும்.

அதே போல அந்த காலங்களில் மனிதனுக்கு இந்த வானத்தில் நடக்கும் நிகழ்வுகளை புரிந்து கொள்ள முடியாமல் இருந்திருக்கலாம். தனது அறிவுக்கு விளங்காத விஷங்களை தனக்கு தோன்றும் கதைகளை வைத்து நிரப்பி அப்போதைக்கு திருப்தி அடைந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான கதைகள்.

அப்படி பார்த்தால் ஆப்ரிக்கா மக்கள் நம்பிய சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடக்கும் சண்டையே சூர்ய சந்திர கிரகணம் என்று சொல்லியது கொஞ்சம் உண்மைக்கு பக்கத்தில் இருக்கும் கதையாக இருக்கிறது. இந்தியா உட்பட மற்ற நாடுகளில் எல்லாம் சூர்யன் சந்திரன் பூமியை தவிர நான்காவது நபர் இந்த நிகழ்வுகளை நிகழ்த்துகிறது. பாம்பு, டிராகன், நாய், தவளை, நரி இப்படி ஏதோ ஒன்று விழுங்குகிறது. 

அறிவியல் வளர்ந்து அது சூரியனும் சந்திரனும் பூமிக்கு நேர்கோட்டில் வரும் பொழுது நிகழும் சாதாரண காட்சி என்ற உண்மை தெரிந்த பிறகு இந்த மக்களை பயப்படுத்தும் கதைகளுக்கு எல்லாம் மற்ற நாடுகளில் வேலையில்லாமல போய்விட்டது. ஆனால் இங்கு இந்தியாவில் அது வேறு வடிவம் பெறுகிறது. வேறு விதமாக மக்கள் பயப்படுத்த படுகிறார்கள்.

1. கிரகணத்தின் பொழுது சாப்பிட கூடாது.
2. கிரகணத்தின் பொழுது ஆபத்தான கதிர்கள் தண்ணீரின் மீதும் உணவின் மீதும் விழும்.
3. கிரகணத்தின் பொழுது வீட்டை விட்டு வெளியே போனால் அந்த கதிர்களினால் ஆபத்து.
4. கர்ப்பிணிகள் வெளியே செல்லவே கூடாது.

சூர்ய கிரகணம் என்பது என்ன என்ற உண்மையை உலகிற்கு சொன்ன அதே விஞ்ஞானம் இந்த புரளி எல்லாம் பச்சை பொய் என்றும் சொல்கிறது. உலகின் ஒரு மனிதன் கூட அப்படி இன்று வரை பாதிக்கப்பட்டதில்லை. 

ஒரே ஒரு பாதிப்பு கண்கள் மட்டுமே.
கிரகணத்தை வெறும் கண்ணில் பார்த்தால் பார்வை குறைபாடு ஏற்படும். சாதாரண நாட்களில் சூரியன் பிரகாசமாக இருப்பதால் வெறும் கண்ணில் பார்க்கும் பொழுது நமது ரெட்டினா சுருங்கிவிடும். அதனால் அதன் வெளிச்சம் உள்ளே புகாது. கிராகணத்தின் பொழுது வெளிச்சம் குறைவாக இருப்பதால் ரெட்டினா சுருங்காது. அதனால் சூரியனின் நேரடி வெளிச்சம் ரெட்டினாவில் விழுவதால் அப்படி பார்வை குறைபாடு ஏற்படுகிறது. மற்றபடி உடலுக்கு ஆபத்தனா கதிர்கள் எல்லாம் ஒன்னும் கிடையாது. தினம் தினம் சூரியனிலிருந்து விழும் அதே கதிர்கள் தான் கிராகணத்தன்றும் விழுகிறது என்கிறார்கள்.

நாளை நீங்கள் பட்டினி கிடக்கும் பொழுது ஒன்றை மட்டும் நினைத்துக்கொள்ளுங்கள். உலகின் எந்த இடத்தில் இந்த கிரகணம் நிகழும் பொழுதும் அந்த மக்கள் இப்படியான முட்டாள் தனத்தை செய்ய மாட்டார்கள். இந்த முட்டாள்தனத்திற்கு நாம் மட்டும் தான் சொந்தகாரர்கள் என்று நினைத்தபடியே விரதத்தை கடைபிடிப்பது உடலுக்கும் மனதிற்கும் நிம்மதி தரும் என முன்னோர்கள் சொல்கிறார்கள்.

அப்பறம் இன்னொரு விஷயம். 
சூரியனும் சந்திரனும் கிரகங்களே கிடையாது. அவை நட்சத்திரங்கள்.

பிரபு மித்ரன்
20/06/2020

Related Articles