Monday, 23 May 2022

வெயில் மேகம்

நல்ல வெயில்!

மழை பிடிக்குமா அல்லது வெயில் பிடிக்குமா என கேட்டால் எனக்கு இரண்டுமே பிடிக்கும். தனித் தனியாக இரண்டு காலங்களுக்கும் கொண்டாட்டமாக செய்ய வேண்டிய காரியங்களையெல்லாம் மறக்காமல் நேரம் கிடைக்கும் பொழுதுகளில் செய்துவிடுவேன். 

உதாரணத்திற்கு, வெயில் காலங்களில் உச்சி வெயில் சுளீரென அடிக்கும் நேரத்தில் மொட்டை மாடியிலோ அல்லது வெட்ட வெளியிலோ எங்காவது நின்று வெயில் காய்வேன். மிருகங்கள் எல்லாம் வெயில் காயுமே அது போல் மணிக்கனக்கில் இல்லாவிடிலும் எனக்கு நேரம் இருக்கும் வரை அத்தனை சுகமாக வெயில் காய்வேன். பிறகு எப்பொழுதாவது வெய்யிலில் வேர்க்க விருவிருக்க எங்காவது தூரமாக நடந்தே கடப்பது, நா.முத்துகுமாரின் வரிகளில் ‘வெய்யிலோடு விளையாடி’ பாடலை கேட்பது, ஒரு வகையில் வெய்யிலை ரசிக்கவும், அதை கொண்டாடவும் எனக்கு இந்த பாடல் தான் சொல்லிக்கொடுத்தது என நினைக்கிறேன், கோடை காலங்களில் அங்கங்கு நடக்கும் அம்மன் கோவில் திருவிழாக்களை ரோட்டோரம் நின்று வேடிக்கை பார்ப்பது, பிறகு 6 மணி வெயில் பார்ப்பது , பச்சை தண்ணி குளியல், இலவச மோர்,  லெமன் ஜூஸ், தயிர் சாதம், மாம்பழம் இப்படி வெய்யிலுக்கு செய்ய எதாவது இருந்து கொண்டே இருக்கும்.

அதே போல மழைனா சொல்லவே வேண்டாம். அதற்காக “மழை, டீ, மிளகாய் பஜ்ஜி, ராஜா சார்” இல்லை. நான் இருக்கும் எல்லா இடங்களிலும் மழையை வேடிக்கை பார்க்க என ஒரு இடத்தை வைத்திருப்பேன். மழை வந்தவுடன் அங்கு சென்று அமர்ந்தோ, நின்றோ கொள்வேன். பாட்டி வீட்டின் காம்பவுண்ட் சுவர், அம்மா வீட்டு படிக்கட்டு, மனைவி வீட்டு முன் வாசற்படி, இப்பொழுது இருக்கும் வீட்டின் பெரிய ஜன்னல். மழை சத்தம் கேட்டால் சின்ராசு உடனே அதற்கான இடத்தில் ஆஜராகி விடுவான். அவனுக்கான டீ, காபி எல்லாம் அதே இடத்திற்கு வந்துவிடுவது போல ஒரு செட்டப் செய்து வைத்திருக்கிறேன். 

வெய்யிலை ரசிக்க நா.முத்துகுமார் சொல்லி கொடுத்தார் என்றால், இங்கு மழையை ரசிக்க எனக்கு அம்மாவும், பாட்டியும் சொல்லிக்கொடுத்தார்கள். ஒவ்வொரு மழைக்காலங்களிலும் ஒரு பிரமாதமான சமயம் அமையும், அல்லது அதை அவர்கள் கண்டுபிடிப்பார்கள். அன்று விடுமுறையாக இருக்கும், அல்லது அடுத்த நாள் விடுமுறையாய் இருக்கும். மாலை வேலையில் மழை வருவதற்கான அறிகுறிகலோடு வெய்யிலும் காற்றும் ஒன்றுக்கு ஒன்று போராடிக்கொண்டிருக்கும். அப்பொழுது அந்த அறிவிப்பு அவர்களிடமிருந்து வரும், ‘பஜ்ஜி சுடலாம்’ என. வீடு பரபரப்பாகும், எதிர் கடையிலிருந்து மாவும், வாழைக்காவும் வாங்கிக்கொன்டு வருவார்கள், தொடர்ந்து சமையலறையில் பாத்திரம் உருளும் சத்தமும், வெளியே காற்று வெய்யிலை தள்ளிக்கொண்டு கொஞ்சம் இருளடர்ந்து மந்தமாக இருக்கும். சுட சுட பஜ்ஜி நம் கைகளுக்கு வரும் பொழுது வெளியே  மழை பெய்துவிடும். மழைக்காக பஜ்ஜி சுடபட்டதா, அல்லது பஜ்ஜி சுட்டதால் மழை பெய்ததா என்றே சொல்ல முடியாதபடி அப்படி அது இரண்டும் சங்கமிக்கும் அந்த நேரம் அடுத்த மழைக்காலம் வரை திருப்தியை கொடுத்துவிடும். பஜ்ஜிக்கு பிறகு டீ கொடுப்பார்கள், அதை வாங்கிக்கொண்டு மழைக்கான இடத்துக்கு போய் நின்றுகொள்வேன். 

இப்பொழுதெல்லாம் மயிலும் எனது மழைக்காலத்தில் சேர்ந்து கொண்டது. மழை வரும் முன் ஆடும் மயில்களை இங்கு நான் இருக்கும் இடத்தில் எங்கும் காணலாம். யார் பார்த்தால் எனக்கென்ன என அது பாட்டுக்கும் உடலை சிலுப்பி தோகையை நெட்டி விரித்து உடலை குழுக்கி குழுக்கி ஆட்டம் போட்டு திரியும். நான் இங்கு வருவதற்கு முன்வரை மழைக்கு முன் ஆடும் மயில்களை எப்பொழுதாவது பார்த்திருக்கிறேன். இங்கு தான் மழையில் மயில் என்ன செய்யும் என பார்க்கிறேன். மழை வரும் வரை ஆடிக்கொண்டிருக்கும் மயில் மழை வந்ததும் ஓடுவதில்லை. அது மிக சாந்தமாக மழையில் அமர்ந்திருக்கிறது, மழையில் மெதுவாக நடக்கிறது, திரும்பவும் எதாவது திண்டில் ஏறி தோகையை சரியவிட்டு அமர்ந்திருக்கிறது. நாம் குடையின் கீழ் நின்று நனையாமல் வெளியே நனைந்து கொண்டிருக்கும் பொருட்களின் வழியே மழையை ரசிக்கிறோம். அது மழையில் நனைந்தபடியே எதை ரசிக்கிறதோ!

பெரும் மழை பெய்யும் பொழுது அதன் சத்தத்தை கேட்டுக்கொண்டே தூங்குவேன், ஆவி பறக்க நூடில்ஸ் சாப்பிடுவேன், பெரும்பாலும் மழைக்கு பாடல் கேட்கும் ரசனை என்னிடமில்லை. வெய்யிலுக்கும், குளிருக்கும் பாடல்கள் வைத்திருக்கிறேன். ஆனால் மழைக்கு வெறுமனே மழை சத்தமே போதுமானதாய் இருக்கிறது. 

இது எல்லாம் இரண்டு காலங்களும் இடைவெளிவிட்டு தனித்தனியே வரும் பொழுது தான். ஆனால் இந்த ஒரு மாதமாக இவை இரண்டும் புதிதாய் சேர்ந்த காதலர்கள் போல பின்னிப்பினைந்து எது எப்பொழுது இருக்கிறது என்றே சொல்லமுடியாமல் மாறி மாறி அடிக்கிறது. 
கோடை மழை இருக்கும். ஆனால் கோடையில் வெயில் அடித்து துவைக்கும் பொழுது மழை பெய்து குளிர்க்கும். அல்லது லேசாக பெய்து சூட்டை கிளப்பும். ஆனால் இது இரண்டுமல்லாமல் கண்ணால் பார்க்கும் பொழுதே மாயவித்தை போல மாறி மாரி விளையாடுகிறது.

காலையில் மழை வருவது போல இருக்கும், ஜெர்கினை எடுத்து போட்டுகொண்டு பைக்கை எடுத்து அலுவலகம் செல்வதற்குள் வெயில் வந்துவிடும். சரி எப்படியும் வெயில் தான் அடிக்க போகிறது என ஜெர்கின் எடுக்காமல் போவேன், அன்று மழையில் நனைந்து நொந்து போய் வருவேன். 

பைக்கை எடுக்கும் பொழுது வெயில் சுளீரென அடிக்கும், சரி போகும் வழியில் குளு குளுவென எதாவது குடிக்கலாம் என போய்க்கொண்டிருக்கும் பொழுதே மழை மேகமாய் மாறிவிடும்.

மழை வருவது போல இருக்கிறது துணி தொவைக்க வேண்டாம், காயப்போட முடியாது என சொல்லிவிட்டு போனால் வெயில் அடித்துவிடும். சரி வெயில் அடிக்கிறது என தொவைத்து காயப்போட சொன்னால் அன்று மழை வந்து அனைத்தையும் நனைத்து பழி வாங்கிவிடும்.

ஒரே நாளில் பத்து முறைகூட இப்படி மாறி மாறி வெய்யிலும் மழையும் வருகிறது. வெயில் அடிக்கிறது என வெயில் பாட்டு போட்டால் அது முடிவதற்கு முன்னே மழை மேகம் வந்துவிடுகிறது. மழைக்கு சூடா எதாவது சாப்பிடாலாம் என்றால் வெயில் வந்துவிடுகிறது. 

ஒரு கையில் ஐஸ்கிரீமும் இன்னொரு கையில் லெமன் டீயும் வைத்துக்கொண்டு ஐஸ்கிரீம் கையை வாயருகில் கொண்டு போனால் மழையும், சரி என லெமன் டீயை பக்கத்தில் கொண்டு வந்தால் வெயில் அடித்தால் என்ன செய்வது. ஒரு வேலையும் ஓட மாட்டேன் என்கிறது. எனக்கு ஏற்கனவே ‘மூட் ஸ்விங்’ நிறைய இருக்கிறது. இதில் இது வேறு என்னை பாடாய் படுத்தியெடுக்கிறது. 

உண்மையை சொல்லவேண்டுமென்றால் இது நன்றாக தான் இருக்கிறது. பெரும் வெய்யிலோ அல்லது பெரும் மழையோ இல்லாமல் ‘கொஞ்சம்’ ‘கொஞ்சம்’ என செல்லம் கொஞ்சிக்கொண்டு இரண்டும் அடிக்கிறது. பிரச்சனை என்னவென்றால். வெய்யிலோ மழையோ, இரண்டும் எதோ ஒரு வகையில் நமது கடந்த காலங்களின் நினைவுச் சங்கிலியுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது. நான் பெங்களூரில் மழை பார்த்து நிற்கும் பொழுது எனக்கு என் பாட்டி வீட்டு காம்பவுண்ட் சுவர் ஞாபகம் வரும். உச்சி வெயில் சூரியனை பார்க்கும் பொழுது, சின்ன வயதில் சூரியனை கண் சிமிட்டாமல் எத்தனை நேரம் பார்க்க முடியும் என அடிக்கடி சோதனை செய்வது ஞாபகம் வரும். ஒவ்வொரு முறை மழை காலங்களில் ரோட்டோரம் போண்டா பஜ்ஜி கடையை பார்க்கும் பொழுதும் சின்ன வயதில் வீட்டில் நடக்கும் மழை பஜ்ஜி சடங்கு ஞாபகம் வரும். இப்படி நிகழ் காலத்தையும் கடந்த காலத்தையும் இனைக்கும் சில நினைவுச் சங்கிலி இப்படி குறுகிய நிமிடத்தில் மாறி மாறி கிடைக்கும் பொழுது சங்கிலியும் அறுந்து, அறுந்து இணைக்கிறது மனநிலையை எதோ செய்கிறது. இருந்தும் இத்தனை அழகான ஒரு வானிலையை ரசிக்கவில்லையென்றால் எப்படி?!! இனிமேல் வருடா வருடம் இது வந்தால் என்ன செய்வது?

முதல்மாடியிலிருக்கும் என் அலுவலகம் மேற்கு பார்த்து இருப்பதால் வெய்யிலோ மழையோ இரண்டுமே பாரபச்சமில்லாமல் பளீரென தெரியும். அதனால் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். வேலையெல்லாம் சீக்கிரம் முடித்துவிட்டு எதையும் யோசிக்காமல் இருக்கையை வாசலுக்கு நேர் போட்டு சம்மனமிட்டு அமர்ந்து இந்த காலத்தை வெறுமனே வேடிக்கை பார்க்கலாமென்றிருக்கிறேன். இனி இதற்காக செய்ய வேண்டிய காரியங்களையெல்லாம் முடிவு செய்ய வேண்டும். முதல்வேலையாக “வெய்யிலோடு விளையாடி வெய்யிலோடு உறவாடி” என முடிந்து ‘’சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால், குடையொன்னு குடையொன்னு தா கிளியே’ என ஆரம்பிப்பது போல ப்ளேலிஸ்டை தயார் செய்ய வேண்டும்.
இப்பொழுது மேக மூட்டமாய் மாறிவிட்டது.

Monday, 21 March 2022

கருணையற்ற காப்பி

விடியற்காலை எழுந்தவுடன் வாசலில் வெறுமனே உலாத்திக்கொண்டிருந்தேன். கதவை திறந்து கடிகாரத்தில் மணியை பார்த்தேன், இன்னும் கிளம்புவதற்கு நேரம் இருந்தது. சரி அப்படியே நடந்து ரோடு வரைக்கும் போய்விட்டு வரலாம் என தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் நடைபயிற்ச்சி செய்யும் வயதான ஒரு சிலரை தவிற வேறு யாருமில்லை. தெரு நாய்கள் கூட ஓரமாக உடலை சுருட்டி படுத்துக்கொண்டிருந்தன. வானம் அத்தனை சாவகாசமாக வெளுத்துக்கொண்டிருந்தது. தெரு முனையிலிருந்த உடற்பயிற்ச்சிகூடத்தில் மட்டும் இந்த சூழ்நிலைக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் ‘டங்கு’ ‘டங்கு’ என சத்தமாக எதோ ஹிந்தி பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. ரோடு போய் சேரும்வரை அது காதில் விழுவதை தவிற்க முடியவில்லை. 

ரோட்டில் வாகனங்கள் சர்ரு சர்ரென சீரிக்கொண்டிருந்தன. முன்னாடியெல்லாம் இந்த நேரத்தில் ரோடு வெறுச்சோடி கிடக்கும். இப்படி எனக்கு நினைப்பு வரும் பொழுதெல்லாம் ‘வயசாகிடுச்சோ’ என தோன்றும். ‘வயசானா ஆகட்டும். தன்னுடைய பால்ய நினைவுகளை விரும்பாதவர்கள் மட்டுமே பழையதை நினைத்து பயப்படுவார்கள். அதில் குறை சொல்வார்கள். நமக்கு என்ன!!’ என்று நானே சமாதானம் சொல்லிக்கொள்வேன்.

இனி எங்கு செல்வது என குழப்பமாக இருந்தது. திரும்ப வீடு செல்ல இரண்டு மூன்று வழிகள் உள்ளன. இன்று ஏனோ அதிலெல்லாம் போக தோன்றவில்லை. அப்படியே சில நிமிடம் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். ரோட்டின் எதிர்பக்கம் கொஞ்ச தூரத்தில் அம்மன் கோவில் வாசலில் இருக்கும் பிள்ளையாரிடம் ஒரு சிலர் சாமி கும்பிட்டுவிட்டு தோப்புக்கரணம் போட்டுக்கொண்டிருந்தனர். சரி அங்கு சென்று கொஞ்ச நேரம் மரத்தடியில் அமர்ந்திருக்கலாம் என ரோட்டை கடந்து நடந்தேன். கோவில் வாசலை எட்ட சில அடி தூரம் தானிருக்கும், திடீரென யாரோ கத்தி ‘தம்பி.. தம்பி’ என அழைத்த சத்தம் கேட்டு திரும்பினேன்.

சாலையோரம் பந்தல் கட்டி போடபட்டிருந்த கடை ஒன்றினுள் தரையில் அமர்ந்தபடி எட்டி ஒரு வயதான அம்மா என்னை பார்த்து கைக்காட்டி கூப்பிட்டுக்கொண்டிருந்தார். நான் திரும்பியவுடன் 
“தம்பி, ஒரு காப்பி ஒன்னு வாங்கிட்டு வா ப்பா” என அதே வேகத்தில் சொல்லவும் நான் எனது பேண்ட்டு பாக்கெட்டை தொட்டவாரே அவசராமாக “அய்யோ நான் காசு எதுவுமே எடுத்துட்டு வரலீங்களே” என்றேன். நான் சத்தியமாக எதையுமே எடுத்துக்கொண்டு வரவில்லை. செல்போன் கூட கொண்டுவரவில்லை. கையை ஆட்டிக்கொண்டு பரதேசம் செல்வது போல வந்திருக்கிறேன். நான் சொல்லி முடிப்பதற்க்குள் அவர்
“காசு நான் தாரேன், என்னால நடக்க முடியலே அதான்” என சொல்லிக்கொண்டே பக்கத்தில் இருந்த துணிக்கு நடுவிலிருந்து எடுத்து ஒரு புது ஐநூறு ரூபாய் நோட்டை என் முன்னால் நீட்டினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த இடத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். கோவிலின் முள்வேலி ஓரமாய் ஒரு சிறு பூக்கடை. ஒரே ஒருவர் நின்றோ அல்லது ஸ்டூல் எதாவது போட்டோ அமர்ந்து வியாபாரம் செய்யும் அளவு தான் இருக்கும். அதில் தரையில் அந்த அம்மா கால் நீட்டி அமர்ந்திருக்கிறார். சுற்றியும் சேலை துணிமணிகள் சிலது தொங்கவிட்டு சிறிய அறை போல பாசாங்கு செய்துவைக்கப்பட்டிருந்தது. தரையில் ஒரு பாயும் போர்வையும் கிடந்தது. அதில் தான் அந்த அம்மா அமர்ந்திருக்கிறார். ப்ளாஸ்டில் தண்ணி பாட்டில் ஒன்று இருந்தது. அங்கு ஒரு ஓரத்தில் ஊண்றி நடக்க இரு கால் உடைய இரும்பு பைப்பில் செய்த கைத்தடி ஒன்று சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. அவர் தலையை உயர்த்தி என்னிடம் ஐனூறு ரூபாயை நீட்டிக்கொண்டிருந்தார்.

நான் இன்னும் தயங்கியபடி “இந்நேரத்திற்கு ஐநூறு ரூபாய்க்கெல்லாம் சில்லரை தரமாட்டாங்களே ம்மா” என்றேன். எனக்கு நிஜமாலே தயக்கம் தான். காலங்காத்தாலே ஐநூறு ரூபாயை நீட்டி “ஒரு காப்பி” என்றால் அவன் என்னை எப்படி பார்ப்பான் என நினைக்கும் பொழுதே... ப்பா... என்னால் முடியாது. பேசாமல் வீட்டுக்கு போய் பர்சை எடுத்துட்டு வந்துடலாமா என்று கூட ஒரு ஓரத்தில் தோன்றியது. 

அதற்கு அந்த அம்மா “அதெல்லாம் குடுப்பாங்கப்பா.. எங்கிட்ட வேற காசு இல்லே.. இது மட்டும் தான் ஒரு பொண்ணு பூ வாங்க குடுத்துச்சு” என்றவாரே பக்கதிலிருந்த காலி டப்பாவை தூக்கி காட்டியது. அதில் சில மாத்திரைகள் மட்டுமே கிடந்தன.

“என்னால நடக்க முடியலே.. இல்லேனா நானே போயிருப்பேன்” என்றார்.
நான் இன்னும் தயக்கம் குறையாமல் “எங்க காப்பி வாங்குறது” என்றேன்.
 இவ்வளவு உறுதியாக சில்லறை தருவார்கள் என்று சொல்லும் பொழுது அவரிடமே கடையையும் கேட்டுவிடலாம் என்ற  யோசனையில் கேட்டேன். நான் யோசித்தவரை சிறிது தூரத்தில் எனக்கு தெரிந்து இரண்டு கடைகள் மட்டுமே இருந்தன. அங்கு பகலிலேயே சில்லரை தர மாட்டார்கள்.

அந்த அம்மா அடுத்து சொன்ன பதில் தான் என்னை இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது
“ஆரியாஸ் ல்லே வாங்கியாப்பா... இந்தா இங்க இருக்கு ல்லே”
காப்பி வாங்க நான் அந்த பகுதியில் 4 மணி நேரம் அழைந்தாலும் எனக்கு ஆரியாஸ் எல்லாம் நினைவில் கூட வராது. ஒரு நாள் சுத்தமாக பசியில்லை. ஸ்விகியில் எவ்வளவு சின்னதாக ஆர்டர் போடலாம் என நினைத்தாலும் 100 இல்லாமல் போட முடியவில்லை. சரி அதுக்கு கடைக்கே போகலாம் என இந்த ஆரியாஸ்க்கு தான் வந்து மிக மிக கம்மியாக எதையோ சாப்பிட்டேன். 150 ரூபாயை பில் கட்டினேன். அதன் பிறகு அது ஏனோ என் நினைவை விட்டே அந்த கடையை அகற்றிவிட்டேன். நான் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் 
“ஆரியாஸ்லயா!” என்றேன்
“ஆமாப்பா.. வேற யாரும் ஐநூறுக்கு எல்லாம் சில்லறை தரமாட்டாங்க. அங்க கண்டிப்பா குடுப்பாங்க” என்றார்.
நான் எதுவும் பேசாமல் தலையை ஆட்டிக்கொண்டு ஆரியாஸ் நோக்கி நடந்தேன். நடக்கும் பொழுது அந்த ஐநூறு ரூபாய் நோட்டை பார்த்தேன். சுற்றிலும் யாருமே இல்லை. இந்த பணத்தை நான் தூக்கிக்கொண்டு ஓடமாட்டேன் என என்ன நிச்சயம். எப்படி தன்னிடமிருந்த ஒரே ஒரு கடைசி நோட்டை இப்படி யார் என்னவென்று தெரியாத ரோட்டில் போகிறவனிடம் தரமுடிகிறது!!? என்ன தைரியம் இது. இப்படி யோசித்துக்கொண்டே ஆரியாஸ் சென்று ஒரு காப்பி என ஐநூறை நீட்டினேன். அவன் ஒன்னுமே பேசாமல் அதை வாங்கி கல்லாவில் போட்டுவிட்டு மீதி சில்லறையை கொடுத்தார். சிறிது நேரத்தில் பார்ஸல் சூடாக வந்தது. வாங்கிக்கொண்டு அந்த அம்மாவை நோக்கி ரோட்டை கடந்து நடந்தேன். அவரிடம் சென்று பார்ஸலை நீட்டினேன். வாங்கிக்கொண்டு “ரொம்ப நன்றிப்பா.. நான் மெட்ராஸ்ல இருந்தேன். கொரானா சமயத்துலே அங்க என்ன பன்றதுனு தெரியல. இங்க புள்ளை இருக்குறா. அவ பாத்துப்பான்னு நடந்தே வந்ததுலே ரெண்டு முட்டியும் போய் சக்கையா இங்க விழுந்து கிடக்குறேன். புள்ளையும் பாத்துக்க மாட்டிங்குறா” என்றார்.

“சாப்பாட்டுக்கு என்ன பன்றீங்க?” 

“உங்கள மாதிரி யாராவது வாங்கி குடுப்பாங்க, இல்ல கோவில்லே எப்பவாவது போடுவாங்க. இன்னைக்கும் காப்பி குடிக்க வேனாம்னு தான் பாத்தேன்.  நைட்டு பூரா இந்த கொசு கடிச்சு கொண்ணூ எடுத்துருச்சு. ஒரே தல வலி. அத்தான் பூ வாங்குற காசுல காப்பி வாங்க குடுத்துட்டேன். இது எப்படியும் இன்னைக்கு பூறா தாங்கும்” என்றார்.

நான் எதுவும் பேசாமல் கவனிப்பத்தை பார்த்துவிட்டு “தம்பி எங்க வேலை பாக்குறீங்க” என்றார்.
என் மூலைக்கு கேள்வி எட்டி விடை சொல்வதற்குள் அவர் கண்களை மூடிக்கொண்டு தலையை ஒரு சிலுப்பு சிலுப்பி “நீ ஒன்னும் கவளைப்படாதே. இப்போ வேணா கஷ்டபடலாம். ஆனா அடுத்த 6 மாசத்துல உனக்கு எல்லா பிரச்சனையும் சரியாகிடும்.. இன்னும் மூனு மாசத்துலே எல்லாம் மாறும்..” என அவர் சொல்வதற்குள் நான் இடைமறித்தேன். அவர் என்னை நம்ப வைக்க கஷ்டபடுவதை பார்க்க முடியவில்லை
“ஒரு நிமிஷம்..”
அவர் கண்களை திறந்தார்
“நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். நாளைக்கு இந்த பக்கமா வரும் போது உங்களுக்கு எதாவது செய்யனும்னு நெனச்சாலும், நீங்க இப்படி குறி சொன்ன நால தான் செய்றதா ஆகிடும். அதானால சொல்லாதீங்க” என்றேன்.
அவர் முகம் டக்கென சாதாரனாமாக மாறி “இல்லப்பா.. நீ நல்லா இருப்பேன்னு ஒரு பெரியவளா சொல்றேன். அவ்ளோதான்” என்றார்.
“சரிங்க.. நான் கிளம்புறேன்” என்றேன்.
“சரிப்பா”
ஒரு நொடி நின்று சரி கேட்டே விடுவோம் என 
“ஒரே ஒரு ஐநூறு ரூபா நோட்டு தான் வச்சுருக்கீங்க. ரோட்டுல போற என்னை நம்பி குடுக்குறீங்களே, நான் தூக்கிட்டு ஓடிட்டன்னா என்ன பன்னுவீங்க?” என்றேன்.

அவர் சிரித்துக்கொண்டே “என்னால எங்கயும் நடக்க முடியாதுப்பா. யாரையாவது நம்பித்தானே ஆகனும். நம்பாம எப்படி வாழ்றது. அதையும் தாண்டி சிலர் எடுத்துட்டு போய்டுறாங்க தான். அதுக்கு என்ன செய்யமுடியும். திரும்பவும் அடுத்த நாள் யாரையாவது நம்பித்தான் ஆகனும். ரோட்டுல கிடக்குற எனக்கு அந்த சாமியும் இந்த மனுஷங்களும் மட்டுமே கதி...
...
நம்பனும் ப்பா” 

நான் அமைதியாக வீடு நோக்கி நடந்தேன். அவர் சொல்லியது இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த மனிதர்களைவிட்டால் நமக்கு நம்ப வேறு என்ன இருக்கிறது. நம்பித்தானாக வேண்டும். எத்தனை முறை ஏமாற்றப்பட்டாலும், எவ்வளவு துரோகத்தை சந்தித்தாலும், எத்தனை வலியை கொடுத்தாலும் கடைசியில் இந்த மனிதரை நம்பித்தான் ஆக வேண்டும். சக மனிதர்களின் மீது வைக்கும் நம்பிக்கையை மட்டும் துணையாக கொண்டு தன் மீதி வாழ்வை கடந்துவிடலாம் என நினைக்கும் அந்த அம்மா எதோ ஒரத்தில் என்னை பாதித்துவிட்டாள். அவள் சொன்ன “நம்பனும் ப்பா” என்பது எனக்கு தேவையான பொழுதெல்லாம் தவிற்க முடியாமல் இனி ஒலிக்கும் என நினைக்கிறேன்.

பிரபு மிதரன்

Related Articles